சிஆர்பிஎஃப் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மூத்த அலுவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கப்பட்ட பங்களாவில், நேற்று முன்தினம் இரவு துணை ஆய்வாளர் கர்னல் சிங் (55), மற்றும் அவரது மூத்த ஆய்வாளர் தஷ்ரத் சிங் (56) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உதவி ஆய்வாளர் தனது உயர் அலுவலரான தஷ்ரத் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தன்னையும் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை ராணுவப் படையின் மூத்த அலுவலர்கள், உள்ளூர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட உதவி ஆய்வாளர் ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூரைச் சேர்ந்தவர் என்பதும் கொலை செய்யப்பட்டவர் ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.