மூதாட்டியிடம் பேச்சுகொடுத்து 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு சென்ற 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள கிராமத்தில் சரோஜா என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.எஸ். மங்கலத்திற்கு சென்றுவிட்டு அரசு பேருந்தில் நயினார் கோவிலுக்கு திரும்பி கொண்டிருந்துள்ளார். அப்போது பேருந்தில் இருந்த 2 பெண்கள் மூதாட்டியிடம் நன்றாக பேச்சு கொடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து அந்த 2 பெண்கள் மற்றும் சரோஜா ஆகிய 3 பேரும் நயினார்கோவில் பேருந்து நிலையத்தில் இறங்கியுள்ளனர்.
இதனைதொடர்ந்து சரோஜா வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த நிலையில் கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலி காணமல் போயிருந்துள்ளது. மேலும் சங்கிலி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரோஜா இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கூறியுள்ளனர். இந்நிலையில் மூதாட்டிக்கு பேருந்தில் தன்னுடன் வந்த 2 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அந்த பெண்களை தேடியுள்ளனர்.
அப்போது அவர்கள் நயினார்கோவில் பகுதியில் உள்ள மளிகை கடை அருகே நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களின் பையை வாங்கி சோதனை செய்ததில் மூதாட்டி சரோஜாவின் தங்க சங்கிலி அவர்கள் திருடியது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து நயினார்கோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த 2 பெண்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாரி, ரஞ்சிதா என்பது தெரியவந்த நிலையில் 2 பேரையும் கைது செய்துள்ளனர்.