தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை முதல் ஊரடங்கு அமலுக்கு வருவதால் மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கில் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் 4,380 வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறிகள், பழங்கள் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவலை 044-22253884 என்ற எண்ணில் தெரிந்துகொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் அருகிலுள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து விற்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.