தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஊரடங்கின் பொது மக்களுக்கான தேவையான அடிப்படை வசதிகளை தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த இக்கட்டான காலத்தில் மக்களுக்கு பசி தீர்க்க திமுகவினர் உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல் பங்குகள் மற்றும் ஏடிஎம்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.