முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பள்ளிக்கு 10 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டையில் உள்ள சேவியர் மேல்நிலைப்பள்ளி கடந்த 1880-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த பள்ளி தொடங்கப்பட்டு 142 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளியில் நேற்று வெள்ளிவிழா சந்திப்பை நடத்தியுள்ளனர். அப்போது 96 நண்பர் குழு சார்பில் புதிய வகுப்பறை கட்டுவதற்காக 10 லட்ச ரூபாய் பணம் தாளாளர் அருட்சகோதரர் குழந்தையிடம் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து முன்னாள் மாணவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. இங்கு படித்த மாணவர்களின் பழங்கால நினைவுகளை வெளிப்படுத்தும் வகையில் மிட்டாய் கடை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆசிரியர் சரவணகுமார் தொகுத்து வழங்கினார். அதன்பிறகு முன்னாள் மாணவர் மன்ற இணை செயலாளர் சங்கர் கணேஷ் நன்றி கூறி நிகழ்ச்சியை முடித்தார்.