சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் அஸ்வின்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நாய் குட்டியுடன் சென்றுள்ளார், அப்போது அந்த வீட்டில் இருந்த 8 மற்றும் 4 வயது சிறுமிகள் நாய்க்குட்டியை பார்த்த உடன் அருகில் சென்றுள்ளனர். அவர்களுக்கு நாயை வைத்து விளையாட்டு காட்டுவது போல நடித்து அஸ்வின் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமிகள் கதறி அழுத உடன் அஸ்வின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் அஸ்வினை கைது செய்தனர். அதே சமயத்தில் அஸ்வின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் நான் காலையில் வேலைக்கு செல்லும் போது 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை தூக்கி முத்தம் கொடுத்து விட்டு சென்றேன்.
இதனை அடுத்து மாலை நேரத்தில் திரும்பி வரும்போது சிறுமியின் தந்தை, அப்பகுதியில் வசிக்கும் அருண், மோகன்தாஸ் ஆகிய 3 பேரும் குழந்தையை என்ன செய்தாய் என கேட்டு என்னை மரத்தில் கட்டிவைத்து அடித்தனர். அதன்பிறகு அருகில் உள்ளவர்கள் என்னை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மோகன்தாஸ், சிறுமியின் தந்தை உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.