மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகையை அபகரித்துச் சென்று இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் அருகே இருக்கும் ரயில்வே பீடரோடு பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரின் மனைவி ரஞ்சிதம். இவர்களுக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சென்ற எட்டு வருடங்களாக பிரிந்து வாழ்கின்ற நிலையில் ரஞ்சிதத்திற்கு கண்ணில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிந்தாமணியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்ற பொழுது இளைஞர் ஒருவர் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்த பொழுது அவர் குடும்ப சூழ்நிலையை கூறியுள்ளார். இதனால் அந்த இளைஞர் அவரிடம் ஆசை வார்த்தை கூறி முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி இருக்கின்றார்.
மேலும் ஒரு தொலைபேசி எண்ணையும் கொடுத்து அனுப்பி இருக்கின்றார். இதனால் ரஞ்சிதம் அடுத்த நாள் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட பொழுது திருநகரியில் இருக்கும் பிரபல வங்கிக்கு 12 மணிக்கு வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் ஒரு போட்டோ எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதில் தான் மிகவும் ஏழ்மையாக இருப்பது போல் இருக்க வேண்டும். அதனால் நகைகள் அணிய கூடாது என அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கிக் கொண்டனர். பின் செல்போனையும் வாங்கிக் கொண்டார்கள்.
இதையடுத்து ஆன்லைனில் விண்ணப்பம் வாங்கி வருவதாக கூறி சென்றவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வராததால் தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து வங்கி அதிகாரியிடம் கூறியதையடுத்து அவர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் சரவணகுமார், கார்த்திக் என்பது தெரியவந்தது. போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவர் மீது ஏற்கனவே திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட பல இடங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.