திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஊசாம்பாடி பகுதியில் வசித்து வரும் சுலோச்சனா,கனகா மற்றும் குப்பு ஆகிய 3 பெண்களும் முதியோர்உதவித்தொகை பெற்று வந்தனர். இவர்களுக்கு சென்ற 4 மாதங்களுக்கு முன் உதவித்தொகை திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 பேரும் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட நிர்வாகமானது புது மல்லவாடி வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகத்தை விசாரணைக்காக அனுப்பிவைத்துள்ளது. இதில் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகம், மனு கொடுத்த 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில் மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டுமெனில் ஒவ்வொருவரும் லஞ்சமாக தலா ரூபாய் 15 ஆயிரம் தரவேண்டும் என்று வருவாய் ஆய்வாளரான ஷாயாஜி பேகம் கேட்டுள்ளார். அந்த வகையில் 3 பேரும் முதற்கட்டமாக தலா ரூபாய் 5 ஆயிரம் என ரூ.15 ஆயிரத்தை லஞ்சப்பணமாக கடந்த 15 நாட்களுக்கு முன் கொடுத்துள்ளனர். அதனை வாங்கிக் கொண்ட ஷாயாஜிபேகம் மீதம் உள்ள பணத்தை கொடுத்தால் தான் முதியோர் உதவித்தொகை வழங்க பரிந்துரைப்பேன் என்று கூறிவிட்டார். இவர்களில் லஞ்சம் கொடுக்க வசதியில்லாத சுலோச்சனா லஞ்சம் ஒழிப்புத் துறை அதிகாரியை அணுகியுள்ளார்.
அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சுலோச்சனா, புதுமல்லவாடி கிராமத்திலுள்ள வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்திடம் அலுவலகத்தில் வைத்து கொடுத்துள்ளார். அப்போது மறைந்து இருந்த துணை போலீ்ஸ் சூப்பிரண்டு வேல் முருகன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் லஞ்சம் வாங்கிய ஷாயாஜி பேகத்தினை கையும் களவுமாக பிடித்து அங்கேயே வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வருவாய் ஆய்வாளர் ஷாயாஜி பேகத்தின் பையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.