உத்திரப்பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியிலிருந்து விலக வேண்டும் இல்லையென்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கூறியுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி அம்மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் என்ற மாவட்டத்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவங்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முறை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு முதல் மந்திரியாக இருக்கும் யோகி ஆதித்யநாத்தை அப்பதவியில் இருந்து நீக்கிவிட்டு அதற்கு தகுதியான வேறொரு நபரை நியமனம் செய்ய வேண்டும். இல்லையென்றால் உத்திரபிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மற்றவர்களின் சகோதரி மற்றும் மகள்களை உங்களின் சகோதரி மற்றும் மகளாக நீங்கள் அனைவரும் கருத வேண்டும். அவர்களை தங்களால் பாதுகாக்க இயலாவிட்டால் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுங்கள்”என்று அவர் கூறியுள்ளார்.