மாலை, மரியாதை சீர் வரிசையுடன் புதிய மாணவர்கள் பள்ளிக்கு வரவேற்கப்பட்டது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டு தாமதமாக தொடங்கியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலை திரும்பியுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் சேர்க்கையும் கூடவே நடந்து வருகிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
அதில் அரசு பள்ளியில் சேருவதால் ஏற்படும் பயன்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மன்பேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல் நாள் தொடக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அப்போது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். மேலும் தங்கள் பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு குரு மரியாதை செய்யும் வகையில் சிறுவர்களுடன் பெற்றோர்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.