புதுவையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் பேட்டியளித்தபோது, 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 127 தினங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் மக்கள் தலையில் சுமையை ஏற்றி வைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்துவிட்டனர். ஆகவே மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய அரசை தூக்கி எறிய போராட்டம் நடைபெறுகிறது. பக்கத்தில் உள்ள நாடுகள் போல் இந்தியாவிலும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழ்நிலைக்கு கொண்டு செல்கின்றனர். இதனிடையில் முதலமைச்சர் ரங்கசாமி வழக்கம்போல் வாய்திறக்காமல் மவுனமாக இருக்கிறார். ஏனெனில் பதவி பறிபோய்விடுமோ என அவர் அஞ்சுகிறார்.
புதுவையில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதற்கு பாஜக முயற்சி செய்கிறது. சட்டசபை கூட்டம் நடைபெறும்போது பாஜகவை சேர்ந்த உள்துறை அமைச்சர் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அத்துடன் பாஜக எம்.எல்.ஏ.க்களும் இல்லை. சட்டசபை முக்கியமா..? சுற்றுப்பயணம் முக்கியமா..? என்று கேள்வி எழுந்தது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று ரூபாய் 6 ஆயிரம் கோடிக்கு முதலீட்டை ஈர்த்து வந்துள்ளார். இதற்கிடையில் நம் மாநில உள்துறை அமைச்சர் எவ்வளவு முதலீட்டை ஈர்த்து வந்துள்ளார்..? என்பதை விளக்கவேண்டும்.
முதல்வர் ரங்கசாமியை வீட்டிற்கு அனுப்பும் வேலையை பாஜக செய்கிறது. பல்வேறு மாநிலங்களில் பதவி, அதிகார பலத்தை கொண்டு ஆட்சியை பிடித்து வரும் நிலையில், அது வெகுநாட்கள் நீடிக்காது என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.