விழுப்புரத்தில் முதல்வர் நிகழ்ச்சியில் அதிமுக கிளைச் செயலாளர் அய்யாவு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் மாவட்ட வாரியாக முதல்வர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அவ்வகையில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க பழனிச்சாமி அவர்கள் வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கட்சி உறுப்பினர்களும் காத்திருந்தனர். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியானது 4 மணி அளவில் தொடங்க இருந்தது. ஆனால், பல மணி நேரமாக விழா தொடங்கவில்லை.
இந்நிலையில் முதலமைச்சர் வருகைக்காக மரக்காணம் அருகே நடுக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட வண்டிப்பாளையம் அதிமுக செயலாளர் அய்யாவு என்பவர் நான்குமுனை சந்திப்பில் காத்திருந்தபோது திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இந்த சம்பம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விழாவில் முதல்வருக்காக காத்திருந்த செயலாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.