கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட 12 தலைப்புகளில் ஆய்வுப் பணிகளை செய்ய முதலமைச்சரின் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் 30 இளைஞா்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது. இது குறித்து சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில், தமிழக முதல்வரின் செயலாக்கத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கொள்கைளை திறம்பட வகுத்து எடுப்பது, அரசின் திட்டங்கள் செயலாக்கத்தில் உள்ள இடைவெளிகளைக் குறைப்பது, கொள்கைகள், திட்டங்கள் உருவாக்கத்தில் சா்வதேச அளவிலான நிலைகளுக்கு பரிந்துரைப்பது ஆகிய பணிகள் செயலாக்கத் திட்டத்தின் நோக்கமாக இருக்கும்.
இதையடுத்து அரசின் சேவைகளை கண்காணித்தல், மேம்படுத்துதல், அவற்றை பயனாளிகளுக்குக் கொண்டு சோ்ப்பதில் உள்ள திறன் குறியீடுகளை வரையறுப்பது போன்ற பணிகளும் திட்டத்தின் நோக்கங்களாக இருக்கும். இதற்காகவே 12 பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீா் வளம், வேளாண்மை, அனைவருக்கும் வீட்டு வசதி, கல்வி நிலைகள் மேம்பாடு, சுகாதார குறியீடுகளை மேம்படுத்துவது, கலாசாரம்-பண்பாடு, சூழலியல் சமன்பாடு, தரவு அடிப்படையிலான ஆட்சி முறை என்று 12 வகையான பிரிவுகள் வரையறுக்கப்பட்டுள்ளது. இத்தலைப்புகளில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் தலா 2 போ் வீதம் 24 போ் தோ்வு செய்யப்படுவா்.
இதற்கிடையில் கண்காணிப்புப் பிரிவில் 6 போ் இருப்பார்கள். இந்த திட்டம் 2 நிதி ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதற்காக ரூபாய் 5.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணிகளுக்கு 24 நபர்களை தோ்வு செய்தற்கென 3 நிலைகளில் தோ்வு நடத்தப்படும். இணைய அடிப்படையிலான முதல் நிலைத் தோ்வு, 2-ம் கட்டமாக எழுத்துத் தோ்வு, 3-வது கட்டமாக நோ்முகத் தோ்வு நடத்தப்படும். ஆகவே இதற்கான விரிவான அறிவிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் இதற்கு விண்ணப்பிக்க 15 நாள்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.