பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வினியோகம் செய்வது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் பிரிட்டனில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிகளை பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அளிக்க இருப்பதாக ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறி ஐரோப்பிய நாடுகளுக்கு குறைந்த அளவே கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளது. இதற்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஜூலை மாதம் இறுதிக்குள் பிரிட்டனில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் முதல் கட்ட தடுப்பூசிகளை செலுத்த இருப்பதாகவும், இந்த பணி முழுவதும் முடிந்த பிறகு தான் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதாக அவரின் செய்தி தொடர்பாளர் ஜெமின் டேவிஸ் கூறியுள்ளார். மேலும் பிரிட்டனில் 66.7 மில்லியன் மக்கள் தொகை இருப்பதாகவும், அதில் 30 மில்லியன் மக்களுக்கு முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பணி முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.