கோவை மாவட்டத்தில் முதல்முறையாக 3 1/2 வயது குழந்தைக்கு சாதி, மதம் சாராதவர் என்ற சான்றிதழ் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
சாதி சான்றிதழ் என்பது குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் வேலைவாய்ப்புகள் அனைத்திற்கும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்டவரின் மதம் குறிப்பிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் சங்கனூர் கே.கே புதூரில் வசித்த நரேஷ் கார்த்திக். இவருடைய மகள் வில்மா (3 1/2). வில்மாவிற்கு மதம், சாதி சாராதவர் என்ற சான்றிதழை வருவாய் துறை மூலம் நரேஷ் கார்த்திக் பெற்றுள்ளார்.
இதுகுறித்து நரேஷ் கார்த்திக் பேசியதாவது, மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு விண்ணப்பத்தில் சாதி மதம் குறிப்பிட வேண்டாம் என்று தமிழக அரசு கடந்த 1973 ஆம் வருடம் அரசாணை பிறப்பித்துள்ளது. ஆனால் பள்ளியில் கல்வி உதவித்தொகை, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்துக்கும் சாதி சான்றிதழ் கேட்கிறார்கள். சாதி மதம் இல்லாமல் இருந்தால்தான் மக்களிடம் ஒற்றுமை ஏற்படும். அதை கருத்தில் கொண்டு என்னுடைய மகளுக்கு கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் சாதி,மதம் சாராதவர் என்ற சான்றிதழ் பெற்றிருக்கிறேன்.
கோவை மாவட்டத்தில் முதன்முறையாக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. வேலைக்காக விண்ணப்பிக்கும்போது ஓ. சி., எஸ். சி., எம். பி. சி., எஸ்.டி ஆகிய பிரிவுகளை குறிப்பிடுகிறார்கள். அதில் சாதி சாராதவர் என்பதற்கு என்.சி என குறிப்பிடப்படும். அப்போதுதான் சாதி, மதம் சாராதவர்கள் விண்ணப்பிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.