பள்ளிக்கல்வித்துறையில் முதன்முறையாக அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகளும், ஆறு முதல் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு, ஒன்பது முதல் பத்தாம் வகுப்பு, 11 முதல் 12 ஆம் வகுப்பு என மூன்று பிரிவுகளில் நடைபெற உள்ளது. பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களை வட்டார அளவிலும், வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட அளவில், மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களை மாநில அளவில் போட்டிகளில் பங்கு பெற செய்ய வேண்டும். மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதிப் போட்டி ஜனவரி மாதம் நடத்தப்பட்டு வெற்றி பெரும் மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
கலையரசன், கலையரசி என்று விருதுகளும் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு மாணவர்களுடைய கலைத்திறன்கள் ஊக்கப்படுத்தப்படும். இந்த போட்டியானது பள்ளி அளவில் நவம்பர் 23ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரையிலும், வட்டார அளவில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 5ஆம் தேதி வரையிலும், மாவட்ட அளவில் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரையிலும் மாநில அளவில் ஜனவரி 3 முதல் ஜனவரி ஒன்பதாம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது.