பிரிட்டன் அரசு, மீன் பிடிப்பதற்கு நடைமுறைப்படுத்திய புதிய கட்டுப்பாடுகளை பிரான்ஸ் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன், Channel தீவுகள் பகுதியில் மீன் பிடிப்பதற்கான உரிமம் பெறுவது குறித்து புதிய தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. ஆனால் பிரான்ஸ் மீன்வளத்துறை கூறியுள்ளதாவது, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறிய ஜனவரி 1ஆம் தேதியன்று இரண்டு நாடுகளும் மீன்பிடித்தல் குறித்து ஒப்பந்தம் செய்தபோது சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
அதனை நாங்கள் சரியாக பின்பற்றி வருகிறோம். அதன் பின்பு வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாக எங்களுக்கு தெரிவிக்கப்பட்டால் மட்டுமே அதனை கடைபிடிப்போம் என்று கூறியுள்ளது. பிரிட்டன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெர்சி தீவில் மீன் பிடிப்பதற்கு, படகுகளை கண்காணிக்க கூடிய தொழில் நுட்பமுள்ள 41 மீன்பிடி படகுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனுடன் சில கட்டுப்பாடுகளையும் புதியதாக நடைமுறைப்படுத்தியிருக்கிறது. எனினும் புதிய கட்டுப்பாடுகளை தங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றும், அது தொடர்பாக பிரிட்டன் அரசு, தங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் பிரான்ஸ் மீன்வளத்துறை கூறியுள்ளது.
பிரிட்டனின் புதிய கட்டுப்பாடுகளின் படி, பிரான்ஸ் மீன்பிடிப்பு படகுகள் செல்லக்கூடிய பகுதிகள், செல்லக்கூடாத பகுதிகள், எவ்வளவு நாட்கள் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வேண்டும் மற்றும் மீனவர்கள் எந்தெந்த இயந்திரங்களை படகுகளில் வைத்துக்கொள்ளலாம் என்பதையெல்லாம் தெரிவிக்கிறது.
பிரெஞ்சு மீனவர்கள், கடந்த மாதம், பிரிட்டன் கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கு தங்களின் சில படகுகளுக்கு மட்டுமே உரிமம் அளிக்கப்பட்டதாக போராட்டம் நடத்தினார்கள். மேலும் பிரிட்டனிலிருந்து, மீன்களை பிரான்ஸுக்கு கொண்டு வந்த டிரக்குகள் நிறுத்தப்பட்டது நினைவு கூறத்தக்கது.