கண்மாய்க்கு மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் மடையில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள அல்லா பிச்சை தெருவில் அப்துல்காதர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷ் ரகுமான், அப்துல்கலாம் என்று 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முழு ஊரடங்கு என்பதால் அண்ணன் தம்பி இருவரும் அப்பகுதியில் பெரிய தர்கா பின்புறம் உள்ள கண்மாய்க்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் தண்ணீர் செல்லும் மடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது திடீரென மடை சரிந்து விழுந்துள்ளது.
இதனையடுத்து இருவரும் மடையின் கதவு பகுதியில் சிக்கி கொண்டனர். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கமுதி துணை சூப்பிரண்டு அதிகாரி மணிகண்டன் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்மாய் மடையில் சிக்கிய சந்தோஷ் ரகுமான், அப்துல்கலாம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.