கள்ளக்குறிச்சி உளுந்தூர் பேட்டை சுங்கச்சாவடியில் 28 பணியாளர்கள் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஊழியர்கள் வசூல் மையங்களை பூட்டிவிட்டு சுங்கச்சாவடி அலுவலகம் எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 3 நாட்களாக நீடித்து வந்த இப்போராட்டம் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் இல்லாமல் சுங்கச்சாவடியை கடந்து சென்று வருகிறது. இதன் காரணமாக சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சுங்கச்சாவடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். எனினும் அதில் உடன்பாடு ஏற்படாததால் ஊழியர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் மத்திய தொழிலாளர் நல துணை ஆணையர் ரமேஷ் குமாரிடம் போராட்டக் குழு சார்பில் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இது தோல்வியடைந்ததால் தொடர்ந்து 3ம் நாள் இரவிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நள்ளிரவில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் தலைமையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற வருவாய்த்துறையினர் போராட்டம் மேற்கொண்ட பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் எங்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை எனில் எங்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களை உங்களிடம் ஒப்படைத்து விடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பின் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு பூட்டப்பட்டு இருந்த வசூல் மையங்களின் பூட்டை உடைத்து அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். இதற்கிடையில் சுங்கச்சாவடியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு வசூல் மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட 28 பணியாளர்கள் அலுவலகம் எதிரில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.