சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்தக் கோரி மெரினாவில் போராட்டம் நடக்க போவதாக வரும் தகவலை நம்ப வேண்டாம் எனவும், மெரினாவில் கூடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆன்லைன் மூலம் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் நேற்று நடந்திய கலந்தாய்வில் வருகிற ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்தநிலையில் சமூக வலைத்தளங்களில் ஆன்லைன் தேர்வு நடத்த கோரி மெரினாவில் வருகிற திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக கல்லூரி மாணவர்கள் அனைவரும் வருகை தர வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. எனவே இதனை நம்பி மாணவர்கள் யாரும் மெரினா கடற்கரைக்கு வரவேண்டாம் எனவும், மீறி வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.