சூயஸ் கால்வாயில் விபத்தில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவர்கிரீன் கப்பல் கடந்த வாரம் சீனாவில் இருந்து 20,000 கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு நெதர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த கப்பல் சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது அங்கு ஏற்பட்ட புயல் காரணமாக குறுக்கும் நெடுக்குமாக சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வாரமாக கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து தொடர்ந்து கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அந்த வகையில் புல்டோசர் இயந்திரத்தை வைத்து நான்கு நாட்கள் கப்பலுக்கு அடியிலிருந்த மணல்களை நீக்கியுள்ளனர். மேலும் இழுவை கப்பல்களை வைத்து எவர்கிரீனை இழுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கப்பல் பெரியதாக நகரவே இல்லை. இதனையடுத்து எகிப்தில் நேற்று பெரிய பௌர்ணமி தோன்றியதால் கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருந்துள்ளது.
இதன்காரணமாக சூயஸ் கால்வாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கால்வாயில் சிக்கிக் கொண்டிருந்த கப்பல் எளிதாக அப்பகுதியினை விட்டு தண்ணீரில் மிதந்தபடி வெளியே வந்துள்ளது. இதனையடுத்து சூயஸ் கால்வாயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.