கொரோனா தொற்று பரவலை தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விளக்கமளித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 63 பேர் தலைநகர் பெங்களூரை சேர்ந்தவர்கள். அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மாநிலத்தில் தலைதூக்கியுள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: “கர்நாடகாவில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற முடிவை அரசு எடுத்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கொரோனா தீவிரம் அடையாமல் தடுப்பதற்கும் மாநில எல்லைப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் கொஞ்சம் அதிகரித்து வருகிறது. ஆனால் நிலமை பயப்படும்படி இல்லை. பிரதமர் மோடியுடன் நாளை நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசு வழங்கும் அறிவுறுத்தலின் பெயரில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கர்நாடக முதல்வர் பசுராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.