நடிகர் விக்ரம் மீண்டும் கோப்ரா படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது கோப்ரா, சியான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். கே.ஜி.எப் பட நடிகை ஸ்ரீநிதி செட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் கோப்ரா படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று கார்த்திக் சுப்புராஜின் சியான் 60 படப்பிடிப்பை நிறைவு செய்த விக்ரம் தற்போது கோப்ரா படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.