ஆவின் பால் பாக்கெட்டில் செஸ்ஒலிம்பியாட் போட்டியின் விளம்பரம் அச்சிடப்பட்ட பாலிதீன் கவர் கொள்முதல் செய்ய டெண்டர் விடாமலும், முன்பே பாலிதீன் கவர் கொள்முதல் செய்து வரும் நிறுவனத்தில் கொள்முதல் செய்யாமலும், ஏற்கனவே அந்த நிறுவனத்திடம் கொள்முதல் செய்து வரும் விலையை விட ஒரு கிலோவிற்கு 30.00ரூபாய் வரை அதிக விலை கொடுத்து குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திடம் செய்ய ஆர்டர் கொடுத்த வகையில், ஆவினில் சுமார் 1 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றிருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவின்பால் பாக்கெட்டில் அளவை குறைத்து விநியோகம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலிலிருந்து மக்கள் மீள்வதற்குள் சர்வதேச சதுரங்கப் போட்டியை வைத்து முறைகேடுகள் நடைபெற்றிருப்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது. ஆகவே ஆவின் பால் பாக்கெட்டில் செஸ்ஒலிம்பியாட் விளம்பரத்தை அச்சிட டெண்டர் விடாமல் ஆர்டர் கொடுக்க ஆவின் அதிகாரிகளை தூண்டியது யார்..? எத்தனைடன் பாலிதீன் கவர் கொள்முதல் செய்யப்பட்டது..?
அதனால் ஆவினுக்கு எவ்வளவு ரூபாய் இழப்பு..? என்பது குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும், அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்து மோசடி செய்த தொகையை அவர்களிடமிருந்து வசூலித்து ஆவின் கணக்கில் வரவுவைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.