தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 31-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை ஜனவரி 20-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்து ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடுமாறு நெல்லையை சேர்ந்த அப்துல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் மூன்றாவது அலை அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது.
ஆன்லைன் வகுப்பு நடந்தால் தான் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆகவே 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்துவதை தவிர்த்து ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த நிலையில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நீதிமன்றத்தின் இந்த ஆலோசனைக்கு முழு வரவேற்பு அளிப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.