Categories
உலக செய்திகள்

மூணு உயிர் பறிபோயாச்சு…. ராணுவ ஆட்சி வேண்டாம்…. போராடும் மக்கள் கைது….!!

மியான்மரில் ராணுவ ஆட்சியை புறக்கணித்து ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.

மியான்மரில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ஆளும் அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக ஜனநாயக ஆட்சியை கவிழ்க்க ராணுவ ஆட்சி முற்பட்டது. மியான்மர் தலைவர் ஆங் சான் சூகி அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை விரும்பவில்லை அவர்கள் ஜனநாயக ஆட்சியே மலர வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரியும் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மர் ராணுவம் இரும்பு கரம் கொண்டு போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். ராணுவத்தின் அடக்குமுறைக்கு மத்தியில் மியான்மரில் நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதேபோல் சர்வதேச நாடுகளிடம் இருந்து மியான்மார் மக்களுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இது ராணுவத்திற்கு பெரும் இடையூறாக உள்ளதால் மிகவும் ஆக்ரோஷத்துடன் போராட்டங்களை ஒடுக்குவதற்கு முயற்சித்து வருகிறது. மியான்மரில் இரண்டாவது பெரிய நகரமான யாங்கூனில் நேற்று காலை மருத்துவ மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அணிவகுப்பு நடத்தியதில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக் கோரியும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். போராட்டக்காரர்கள் அங்குள்ள ஹெல்டன் சென்டர் பகுதியை சென்றடைந்ததும் ராணுவ வீரர்கள் வழிமறித்தனர் அவர்கள் அந்த தடுப்புகளை மீற முற்பட்டதும் அவர்கள் இருவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

ராணுவ வீரர்கள் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி, ரப்பர் குண்டுகளால்  சுட்டு, கண்ணீர் குண்டு வீசி கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களும் ராணுவத்தினர் மீது அங்கு கிடந்த பொருள்களை வீசியதால் வன்முறை பெரியதாகி அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. கூட்டத்தினை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. எனினும் உயிர் சேதம் உள்ளதா என்ற தகவல் வெளிவரவில்லை.

இச்சம்பவம் குறித்து நூற்றிற்கும் மேலான போராட்டக்காரர்களை குண்டுகட்டாக லாரிகளில் தூக்கி கைது செய்துள்ளனர். மியான்மரில் மாண்டலே என்ற பகுதியிலும் நடந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் லாரிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆட்சி கவிழ்ப்பிற்கு பின் 800க்கும் மேற்பட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது

Categories

Tech |