மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள மக்கள் ராணுவத்தின் அடக்குமுறையால் கடும் வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
மியான்மரில் பிப்ரவரி 1 முதல் ராணுவ ஆட்சி முறை அமல்படுத்தப்பட்டதோடு அனுமதியின்றி விமானங்களை இயக்கவும் இணையதள சேவையை முடக்கியும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தியும் ராணுவத்தினர் மக்களை வன்கொடுமை செய்து வருகின்றனர். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது எனக்கூறி அதிபர் வின் மைண்ட் அரசு ஆலோசகர் ஆங் சான் சுகி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் சிறை பிடித்து வைத்துள்ளனர். ராணுவத்தினரின் இந்த அடக்குமுறைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதனால் போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. போராட்டத்தின் போது ராணுவவீரர்கள் மக்களின் மீது தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 28 மனித உரிமை போராட்டத்தில் ராணுவத்தினர் போராட்டத்தை அடக்க முயன்றதால் அவ்விடமே போர்க்களம் போல காட்சியளித்தது. அதில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கொடூர அடக்குமுறைக்கு அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மியான்மரில் நடந்து வரும் போராட்டங்களில் ஏற்படும் வன்முறையை தொடர்ந்து அமெரிக்கா கண்காணித்து வருகிறது.
மியான்மர் மக்களுக்கு எப்பொழுதும் நாங்கள் ஆதரவாக இருப்போம். இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக நாங்கள் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலாளர் அந்தோணி பிளிங்கின் தனது ட்விட்டர் பக்கத்தில் பர்மா மக்கள் மீதான ராணுவ அடக்கு முறையை கண்டிக்கிறோம். பர்மா மக்களுடன் நிச்சயம் நாங்கள் துணை நிற்போம். இந்தக் கடுமையான போராட்டத்திற்காக அனைத்து நாடுகளும் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.