மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். மேலும் இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஒரு லட்சமாவது விவசாயிக்கு ஆணையினை முதலமைச்சர் வரும் 16ஆம் தேதி ஆணை வழங்க உள்ளார். ஒரு லட்சம் விவசாயிகள் காணொலிக் காட்சி மூலமாக அந்தந்தப் பகுதிகளில் இருந்து பங்கேற்கிறார்கள்.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறைந்து விடக்கூடாது என்பதற்காக 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி டெண்டர் விடப்பட்டு இருக்கிறது . 216 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள் சமூகவலைத்தளங்களில் மின்சார வாரியத்தை டேக் செய்தால், தங்களுடைய இணைப்பு எண்ணுடன் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக மட்டுமே மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மற்றபடி சீரான மின் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. மின் பற்றாக்குறையால் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்படுகிறது என்ற பிரச்சனை இல்லை. மின்வாரியத்தில் பல்வேறு செலவினங்களை குறைத்தது காரணமாக 2,200 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.