நாட்டில் தற்போது பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அனைவருமே செல்போனை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பல பேர் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு வீட்டிலும் பல்வேறு செல்போன்களும், அதற்கான சார்ஜர்களும் இருக்கிறது. இதனால் எலக்ட்ரானிக் கழிவுகளானது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு புது திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது, இந்தியா முழுதும் அனைத்துக்கும் ஒரே மாதிரியான சார்ஜரை பயன்படுத்துவதுதான் அத்திட்டம் ஆகும். ஐபோன், ஆண்ட்ராய்டு செல்போன், டேப்லேட், லேப்டாப் என ஒருவர் இப்போது பயன்படுத்தி வரும் முக்கிய மின்னணு கேஜெட்களுக்கு பொதுவான சார்ஜர் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதற்குரிய நடவடிக்கையை இப்போது மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. தற்போது இந்திய ஸ்மார்ட் போன் சந்தையிலுள்ள பெரும்பாலான போன்கள் type c சார்ஜர் C கொண்டுள்ளது. பழைய மற்றும் புது சாதனங்களுக்கு இடையில் சார்ஜ் ஏற்றுவதில் பிரச்சனை இருக்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தனித்தனி சார்ஜர், கேபிள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இதனால் மக்கள் சிரமத்தை சந்திப்பது மட்டுமல்லாது மின் நுகர்வு மற்றும் மின்னணு கழிவும் அதிகரிக்கிறது. இது குறித்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் கண்டுபிடிப்பு கூட்டமைப்புகளின் (EPIC) அறக்கட்டளை உட்பட பெரும்பாலானோர் கலந்துகொள்ள உள்ளனர்.
அதுமட்டுமின்றி தகவல் தொழில்நுட்பத்திற்கான உற்பத்தியாளர்கள் சங்கம் (MAIT), இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு (FICCI), இந்திய தொழில் கூட்டமைப்பு (CII), அசோசியேட்டட் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி ஆப் இந்தியா (ASSOCHAM), நுகர்வோர் மின்னணுவியல் மற்றும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் (CEAMA), இந்திய எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் (IEEMA) பங்கேற்க இருக்கின்றனர். அத்துடன் ஐஐடி கான்பூர், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்) வாரணாசி, இந்தியா செல்லுலார் மற்றும் எலக்டரானிக்ஸ் அசோசியேஷன் போன்றவையும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆகவே மின்னணுக்கழிவு அதிகரிப்பைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.