நில பிரச்சனையால் மின்தடையை பயன்படுத்தி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. 55 வயதான இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் மாட்டு தொழுவம் ஒன்று வைத்துள்ளார். இந்த தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாகும். அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்துள்ளார். அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) என்பவருக்கும் சொந்தமாக திருவாவடுதுறை ஆதின மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலம் இருக்கிறது. செல்லத்துரை இடத்தை ஆக்கிரமிக்க கொல்லி மாடசாமி பல்வேறு முயற்சி செய்து வந்ததாகவும், ஆனால் அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஒரு வாரமாக கொல்லி மாடசாமி, நிலம் தொடர்பாக செல்லத்துரையிடம் தகராறு செய்து வந்ததுள்ளார். இந்நிலையில் செல்லத்துரை வழக்கம்போல் வீட்டுக்கு எதிரில் உள்ள மாட்டு தொழுவத்தில் மாடுகளுக்கு உணவை வைத்துவிட்டு நேற்று இரவு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் மின் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கொல்லி மாடசாமி உள்ளிட்ட சிலர், செல்லத்துரையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அலறல் சத்தம் கேட்டு, குடும்பத்தினர் உறவினர்கள் வந்து பார்த்தபோது செல்லத்துரை ரத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் குற்றவாளிகளை கைது செய்யும்வரை உடலை எடுக்கப்போவதில்லை என கூறி செல்லத்துரையின் உடலுடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், செல்லத்துரை உறவினர்கள் கொல்லி மாடசாமியின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
இதனால் புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர், கடையநல்லூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து செல்லத்துரை உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். செல்லத்துரை மற்றும் கொல்ல மாடசாமி ஆகிய இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தப் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.