Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி… நிவாரண தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல்…!!!

மின்சாரம் தாக்கி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தது தொடர்பாக நிவாரணம் தொகை கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி அருகில் திட்டுவிளை வடக்கு மார்த்தால் பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி(60). இவர் கடந்த 20 வருடங்களாக பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் மார்த்தால் காரியாங்கோணம் பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு தினங்களாக மின்சாரம் இல்லை. இதுகுறித்து பொறியாளருக்கு வந்த அழைப்பின் பேரில் மின் இணைப்பை சீரமைக்க ஹைதர் அலி சென்றுள்ளார்.

அப்போது அவர் மின்கம்பத்தில் ஏறி சீரமைப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென மின்சாரம் அவரை தாக்கி மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் ஹைதர் அலியை மீட்டு சிகிச்சைக்காக பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹைதர்அலி ஏற்கனவே இறந்ததாக கூறினார்.

இத்தகவலை அறிந்த பூதப்பாண்டி மின்வாரிய அலுவலகம் மூலம் காவல் நிலையத்திற்கு மின்சாரம் தாக்கி ஒருவர் இறந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதை அறிந்த ஹைதர் அலியின் உறவினர்கள் மற்றும் திட்டு விளையை சேர்ந்த பொதுமக்கள் அவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று திட்டுவிளை பேருந்து நிலையம் அருகில் அருகே திடீரென்று சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு பூதப்பாண்டி பேரூராட்சி 5வது வார்டு கவுன்சிலர் அசாருதீன் தலைமை தாங்கினார். மேலும் எஸ்.டி.பி.ஐ திட்டுவிளை நகர தலைவர் ஷேக் மைதீன், பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நகர தலைவர் அன்சாரி, பூதப்பாண்டி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர் மரிய அற்புதம், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இத்தகவலை அறிந்த பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் காவல்துறையினர் அங்கு சென்று போராட்டம் நடத்திவரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் இத்தகவலை அறிந்த நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா, மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெபகார் முத்து, உதவி பொறியாளர் சசிகுமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவர்கள் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிதியுதவி கொடுக்கவேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுவாக அளித்துள்ளனர். இந்த மனுவை மின்சார வாரிய செயற்பொறியாளர் அரசுக்கு பரிந்துரை செய்வார் என்று தெரிவித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின் பூதப்பாண்டி காவல்துறையினர் ஹைதர்அலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |