தமிழகத்தில் இலவச மற்றும் மானிய விலையில் மின்சாரம் பெறுவதற்கு மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள 2.36 கோடி நுகர்வோர்கள், 21 லட்சம் விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி ஆகிய தொழில்களுக்கும், முதல் 100 யூனிட்களை இலவசமாகப் பெறும் மக்கள் என அனைவரும் மின் கட்டண எண்ணுடன் ஆதார்கார்டை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. சென்ற அக்டோபர் 6ஆம் தேதி அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஆதார்கார்டு வைத்திருக்காதவர்கள் உடனடியாக ஆதார் எண்ணை பெறவேண்டும் எனவும், புது ஆதார்கார்டு வரும் வரை பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்டு ஆகிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாளத்தையோ (அல்லது) புதிய ஆதார் பதிவுசெய்ததற்க்கான அடையாளத்தையோ சமர்ப்பித்து மானியத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இதுவரையிலும் அரசு ஆதார் அட்டையை வங்கி கணக்குடன், ஆதார் அட்டையை பான் கார்டுடன், ஆதார் அட்டையை மொபைல் நம்பருடன், ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் என பல முக்கியமான ஆவணங்களுடன் இணைக்கவேண்டும் என்று அறிவித்து அந்த செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் மின்சாரகட்டண எண் உடன் ஆதாரை இணைப்பதற்கு வலியுறுத்தியிருக்கிறது. அரசின் நிதியில் இருந்து வழங்கப்படும் இந்த மானிய திட்டத்தை அரசு ஆதார் சட்டம் 7-வது பிரிவின் கீழ் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மின்சார வாரியம் கூறியபோது, வாரியம் அதன் அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில் இன்னும் சில நாட்களில் “நுகர்வோர் தகவல்” என்பதன் கீழ் ஒரு லிங்கை வழங்கும். அவற்றில் மக்கள் தங்கள் ஆதார் எண்களை பதிவுசெய்யலாம். அவ்வாறு பதிவு செய்தவுடன் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அதுமட்டுமின்றி ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்தும்போது மக்கள் ஆதார் எண் மற்றும் ப்ரொபைலை அப்டேட் செய்யவேண்டும் எனவும் தெரிவித்து இருக்கிறது. இன்னும் 2 மாதங்களில் ஏராளமான மக்களின் ஆதார்அட்டை இணைக்கப்பட்டுவிடும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. எனினும் இது வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு சுமையாக இருக்கும் என சில அதிகாரிகள் கூறுகின்றனர்.