சூயிங்கம் தொண்டையில் போய் சிக்கி 2 1/2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள பொத்தனூர் தண்ணீர் பந்தல் மேடு பகுதியில் இளவரசன் என்பவர் அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயதில் உஷாரிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று உஷாரிகா சூயிங்கம் மிட்டாய் சாப்பிட்டுள்ளார். அப்போது அந்த சுவிங்கம் குழந்தையின் தொண்டையில் போய் சிக்கியுள்ளது.
இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு திணறியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.