மிட்டாய் வாங்கி கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நபரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டிவைத்து தர்மஅடி கொடுத்தனர்.
தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டிக்கு சென்றுள்ளார். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகளுக்கு மிட்டாய்கள் வாங்கிக் கொடுத்து மறைவான பகுதிக்கு அழைத்து சென்றார். இதனையடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார்.
இதனால் பயந்த சிறுமிகள் உடனடியாக கத்தி கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற பாண்டியை அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த பாண்டியை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.