நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று திரையரங்குகளிலும் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகன் ,ஆண்ட்ரியா , ஸ்ரீமன், சாந்தனு , அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
தீபாவளியை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூடியூபில் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. யூடியூபில் மட்டுமின்றி திரையரங்கிலும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட படக்குழுவினர் மாஸ்டர் படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு யூடியூபிலும் 6:30 மணிக்கு திரையரங்குகளிலும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். நேற்று வெளியான இந்த அறிவிப்பால் உற்சாகத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.