உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களிடையே பேட்டியளித்தார்.
உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அண்ணா ஜோசப் மருத்துவமனையின் இருதய அறிவியல் துறை இயக்குனரான மருத்துவர் மாதவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 29ஆம் தேதியன்று, உலக இருதய தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இந்த கொரோனா காலகட்டத்தில், இருதய நோயாளிகளை ஆய்வு செய்தபோது, அவர்களில் பலர் கொரோனா அச்சத்தால், மருத்துவமனையை நாடாமல் இருந்ததன் காரணமாக பெரும் ஆபத்தையும், உயிர் போகும் நிலையை அடைந்தது தெரியவந்துள்ளது.
எனவே இருதய நோய் உள்ளவர்கள் உடனுக்குடன் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது நல்லது என்றும், இருதய நோயுள்ளவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் பட்சத்தில், அவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் எச்சரித்துள்ளார். அதேபோல், மாஸ்க் அணிவதன் மூலம், நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால்,
நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யும் போது, சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிவதை தவிர்த்து பயிற்சி செய்வது நல்லது. இதன் மூலம் சரியான நேரத்தில் இருதயத்திற்கு தேவையான சுவாசம் கிடைக்கும். இருதய நோயாளிகள் சாப்பிடும் உணவுடன் காய்கறி, மஞ்சள், மிளகு, எலுமிச்சை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளுதல் நல்லது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், லாக்டவுன் காலகட்டத்தில், அனைவரும் வீட்டில் இருந்ததால், பலருக்கு மன அழுத்தம் குறைந்து உள்ளது. இதனால் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் குறைந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.