பெரம்பலூரில் கொரோனா விதிமுறையை மீறி முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் பொது மக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் செல்கின்றனர். இதனால் சுகாதாரத் துறையினர், காவல் துறையினர், நகராட்சி, உள்ளாட்சி, வருவாய்துறையினர் அபராதம் விதித்தும் முக கவசம் அணியாமலேயே பெரும்பாலானோர் செல்கின்றனர். பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் கொரோனா நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளையும் முறையாக பின்பற்றுவதில்லை.
இந்நிலையில் நேற்று பெரம்பலூர் நகர பகுதியில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு காவல்துறையினர், நகராட்சி, சுகாதார துறையினர் அபராதம் எதுவும் விதிக்கவில்லை. அதற்கு மாறாக அவர்கள் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில் கொரோனா சோதனைக்கு பயந்து ஒரு சிலர் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதேபோல் முக கவசம் அணியாமல் பேருந்து நிலையங்களில் இருந்த பயணிகளுக்கும் கட்டாயக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.