மாஸ்க், தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர்.
நாடு முழுவதும் கொரோனா, ஒமிக்ரான் தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளின் அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. அதில், குறிப்பாக மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் முக கவசம் அணிவது குறித்து இருவேறு முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
அது என்னவென்றால், அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அங்கம் வகிக்கின்ற ஜனநாயக கட்சி முக கவசம் கட்டாயம் அனைவரும் அணிய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. அதேசமயம் பல மாகாணங்களில் முன்னிலையில் இருக்கும் குடியரசு கட்சி, முகக் கவசத்தை மக்கள் கட்டாயம் அணியவேண்டும் என்று சொல்லவில்லை.
அதே நேரம், ஜனநாயக கட்சி ஆட்சியிலிருக்கும் கலிபோர்னியா போன்ற மாகணங்களில் உள்ளரங்கங்களில் மாஸ்க் அனைவரும் அணிய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் முகக்கவசம் அணிவது மற்றும் தடுப்பூசி செலுத்தி கொள்வதும் தனிநபரின் விருப்பமாக இருக்க வேண்டும், யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நினைவிடம் தொடங்கி லிங்கன் நினைவிடம் வரை கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்..