கேரள மாநிலத்தை சேர்ந்த காதலர்கள் நீலன் கிருஷ்ணா மற்றும் ஆத்விகா. 3ஆம் பாலினத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்துள்ளனர். அதற்குரிய பணிகளை முறைப்படி செய்து, கொல்லங்கோடு பகுதியில் உள்ள கச்சம்குறிச்சி மகாவிஷ்ணு கோவிலில் நேற்று (நவ..24) திருமணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். திருமணப் பத்திரிக்கை அடித்து கோவிலில் திருமணம் நடைபெறுவதாக பல பேருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவில் நிர்வாகம் அவர்கள் கோயிலினுள் தாலி கட்டிக்கொள்ள அனுமதி மறுத்துள்ளது.
இதன் காரணமாக அவர்கள் கோயிலுக்கு அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் செய்துகொள்ள நேர்ந்தது. இதுகுறித்து கோயில் நிர்வாகி மோகனன் பேசியதாவது, கச்சம்குறிச்சி கோவில் மலபார் தேவசம்போர்டுக்கு கீழ் செயல்படுகிறது. இதனால் 3ஆம் பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணத்துக்கு முன்னுரிமை இல்லை. அவர்கள் கோவிலுக்குள் தாலி கட்டிக்கொள்ள அனுமதியில்லை என்று குறிப்பிட்டார். இவ்வாறு திருமண ஏற்பாடுகள் செய்து அனைவரையும் அழைத்தபின் அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்களின் திருமணம் அருகில் இருந்த செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்தது. இது பற்றி நீலன் கிருஷ்ணா பேசியதாவது, தங்களுக்கு யாருடைய ஆதரவும் கிடைக்கவில்லை.
கோவில் நிர்வாகத்தினர் எங்களுக்கு எதிராக நிற்கின்றனர். கோவிலினுள் தாலி கட்டிக்கொள்ள அனுமதி தர மறுக்கின்றனர். நாங்கள் மாற்றுப் பாலினத்தவர்களாக பிறந்தது எங்கள் குற்றமா..? என கேள்வியெழுப்பினார். இதனிடையில் நீலன் கிருஷ்ணா மற்றும் ஆத்விகா போன்றோர் கொல்லங்கோடு பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். ஆத்விகாவின் பெற்றோர் உட்பட 150 பேர் திருமணத்துக்காக வந்திருந்தனர். எனினும் கோயில் நிர்வாகத்தின் அனுமதி மறுப்பால் அவர்கள் காக்கவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக நீலன் கிருஷ்ணா வேதனை தெரிவித்தார்.