Categories
மாநில செய்திகள்

“மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை”…. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்…..!!!!!

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து பணியமர்த்த உயர்நிலைக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு முதலமைச்சர் சார்பில் பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்,
“மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சிறப்புப் பள்ளிகள், அரசு மறுவாழ்வு இல்லங்கள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் என 24 கட்டடங்களுக்கு, மேற்கூûரை சரிசெய்தல், கணினி ஆய்வகம் அமைத்தல், கழிப்பறை அமைத்தல், இல்லவாசிகளின் விடுதிகள் அலுலவக கட்டட பராமரிப்பு ஆகியவற்றுக்காக ரூபாய் 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதையடுத்து தென்மாவட்டங்களில் உள்ள செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் உயர்கல்வி படிக்க  வசதியாக கணினி அறிவியல், வணிகவியல் போன்ற இளநிலை பட்டப்படிப்பினை படிப்பதற்கு உயர் கல்வித்துறையின் இசைவுடன் ரூபாய் 18 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படும். சென்னை மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் எளிதில் சேவையைப் பெறுவதற்காக ரூபாய் 1.51 கோடிசெலவில் கூடுதலாக 1 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகம் அமைக்கப்படும். அதன்பின் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் உதவித்திட்டத்தின் வாயிலாக வழங்கப்படும் ரூபாய் 25 ஆயிரம் தொகையினை அறிவார் குறைபாடுடையோர், புற உலக சிந்தனையற்றோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கும் நீட்டித்து 400 பயனாளிகளுக்கு வழங்கும் அடிப்படையில் ரூபாய் 5 கோடி நிதி ஒதுக்கீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இதனிடையில் மாற்றுத்திறனாளிகள் சுயத் தொழில் புரிந்து வாழ்வில் முன்னேறுவதற்கு தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு தற்போதுள்ள வயது உச்சவரம்பினை 45-இல் இருந்து 60-ஆக நீட்டித்து ரூபாய் 1.48 கோடி செலவில் வழங்கப்படும். இத்திட்டத்தின் வாயிலாக 2,100-க்கும் அதிமான மாற்றுத்திறனாளிகள் பயன் பெறுவார்கள். மேலும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு முதற்கட்டமாக திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூபாய்1 கோடி செலவில் 75 நபர்கள் பயன்பெறும் அடிப்படையில் 3 சிறப்பு இல்லங்கள் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக செயல்படுத்தப்படும் 235 இல்லங்கள், சிறப்புப் பள்ளிகளிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் உணவூட்டு மானியம் ரூ.900-லிருந்து ரூ.1,200ஆக உயர்த்தி ரூ.3.92 கோடி கூடுதல் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செவித்திறன் குறைபாடுடையோருக்கான நடுநிலைப் பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாகவும், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள 2 செவித்திறன் குறைபாடுடையோருக்கான உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் ரூபாய் 1.15 கோடி செலவில் 128 மாணவர்கள் பயன்பெறும் அடிப்படையில் தரம் உயர்த்தப்படும். அத்துடன் அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதற்கு தேவையான வாடகை, முன்தொகை செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தகுதியான பயனாளிகளுக்கு பொதுப்பணித்துறை, வருவாய்துறை போன்ற துறைகளுடன் ஆவின் நிறுவனம் இணைந்து ஆவின் பாலகம் அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் மாவட்ட ஆட்சியர் கூட்டம் நடத்தும்போதும்,  முக்கிய நிகழ்வுகளின்போதும் செவித்திறன் பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் அடிப்படையில் சைகை மொழிபெயர்ப்பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் வாயிலாக செய்து தரப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் வலியுறுத்தப்பட்டுள்ளபடி  4 % இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப்பணிகளில்  வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அரசுத் துறைகளில் ஏ, பி தொகுதிகளில் 559 பதவியிடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உகந்த பதவியிடங்களாக கண்டறியப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், குழுமங்கள், அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களில் ஏ, பி தொகுதிகளில் உள்ள பதவியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பதவி இடங்களைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சி,டி தொகுதி பதவி இடங்களைப் பொறுத்தவரை அனைத்துப் பதவியிடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த பதவியிடங்களாக கண்டறியப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் பல்வேறு துறைகள் வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளைக் கண்காணிக்க, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர்கள் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, மனித வள மேலாண்மை துறை போன்ற துறைகளின் அரசு செயலாளர்களைக் கொண்டு உயர்மட்டக்குழு அமைக்கப்படும். மேலும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலைவாய்ப்பினைக் கண்டறிய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் வாயிலாக வீட்டு மனைபட்டா வழங்கப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |