மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடு முகாம் நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மாவட்டத்தில் அமைந்துள்ள 12 ஒன்றியங்களிலும் வருகின்ற 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி வரை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் மதிப்பீடு செய்து அவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் 2021-2022 கல்வி ஆண்டில் ஒருங்கிணைந்த பள்ளிகல்வியின் கீழ் முன் தொடக்க நிலை, தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.