கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று காரணமாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம் , புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நேரடி விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அதற்கு பதில் பல நிலுவையில் இருந்ததால் காணொலி மூலம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் காணொலி மற்றும் நேரடி விசாரணை என்று கலப்பு முறையில் முக்கியமான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி வரும் மார்ச் 7 ஆம் தேதி முதல் நேரடி முறையில் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் மார்ச்-7ம் தேதி முதல் நேரடி முறையில் விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் தனபால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கலப்பு முறையில் வழக்குகளை விசாரிக்கும்போது சிக்கல்கள் ஏற்பட்டதாக சக நீதிபதிகள் தெரிவித்ததன்படி தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி காணொலி காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ள தற்போது தடை விதித்துள்ளார். ஆகவே 2 வருடங்களாக நடந்துவந்த காணொலி விசாரணை நிறுத்தப்பட்டு நேரடி விசாரணை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.