மாரடைப்பு ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி வ.உ.சி வீதியில் கார் ஓட்டுநரான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது காரில் ஈரோடு கச்சேரி வீதியில் இருக்கும் தாலுகா அலுவலகத்தை கடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென ராஜேந்திரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் காரை இயக்கிய நிலையிலேயே ஸ்டீயரிங்கை பிடித்தபடி ராஜேந்திரன் மயங்கிவிட்டார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி பன்னீர்செல்வம் பார்க் சிக்னலில் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் மற்றும் பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
மேலும் விபத்தில் சிக்கிய ஸ்கூட்டர் பேருந்துக்கு அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் ராஜேந்திரன் மற்றும் ஸ்கூட்டரை ஓட்டி வந்த திருமலைச்சாமி ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராஜேந்திரனும், திருமலைசாமியும் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.