இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு மாநிலங்களின் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக டெல்லி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தியுள்ளது.
மேலும் அத்தியாவசிய துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி அரசின் அனைத்து துறை அலுவலகங்களில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மருத்துவ விடுப்பு தவிர, வழங்கப்பட்ட அனைத்து விடுமுறைகளும் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு மற்றும் நிலைமையை கையாள போதிய அரசு ஊழியர்கள் பணியில் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.