ஒடிசா மாநிலத்தில் முதல் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை 3% உயர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று இளம் ஆசிரியர்கள், தொடக்கப்பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் ஊதியத்தை ஒடிசா மாநில அரசு உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் இளம் ஆசிரியர்களுக்கு ரூ.9200 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இது தற்போது ரூ.13,800 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதனைப்போலவே ஒப்பந்த ஆசிரியர்களின் ஊதியம் ரூ.7400 இருந்து ரூ.11,000 ஆக உயர்த்தப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம் 33,000 இளம் ஆசிரியர்கள், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். மேலும் இதன் மூலம் மாநில அரசுக்கு ரூ.168 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இந்த ஊதியம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.