தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்திருக்கின்றது. இந்த கோவில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் வருடம் தோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.
இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் அதன் முக்கிய நாளாக எட்டாம் தேதி வேளாங்கண்ணி மாதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் பிற மதத்தினரும் செல்வது வழக்கமாகும். அந்த வகையில் பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
மேலும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் தவிர வேளாங்கண்ணிக்கு 27ஆம் தேதி 25 பேருந்துகளும், 28ஆம் தேதி 25 சிறப்பு பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது பற்றி மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் பேசும்போது சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இரண்டு நாட்கள் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் மக்களின் தேவைக்காக பேருந்துகளை இயக்க தயாராக இருக்கின்றோம் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.