அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா ( வயது 17 ) என்ற மாணவி தஞ்சையில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த லாவண்யா திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே அந்த மாணவி விஷம் குடித்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது வீடியோ ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில் மாணவி தன்னை வார்டன் சகாய மேரி விடுதி கணக்குகளை பார்க்கச் சொல்லி வற்புறுத்தியதாலும், விடுதி கழிப்பறைகளை சுத்தம் செய்யுமாறு வற்புறுத்தியதாலும் தான் தற்கொலை செய்து கொண்டதாக மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அதேபோல் அந்த வாக்குமூலத்தில் கட்டாய மதமாற்றம் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை.
ஆனால் பாஜகவினர் கட்டாய மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பில் அவருடன் பயின்று வந்த சக மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறினார்.
மேலும் அந்த விசாரணையில் யாரும் கட்டாய மதமாற்ற முயற்சி நடந்ததாக கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். உண்மையை சொல்லப்போனால் இந்து மாணவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் அங்கு படித்து வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் அங்குள்ள கிறிஸ்தவ நிறுவனங்கள் எந்தவித பாகுபாடுமின்றி கல்விக்கு தான் முன்னுரிமை அளித்து வருகின்றனர் என்று அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.