பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவியின் உயிரிழப்புக்கு நியாயம் கிடைக்கும் என கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி ஸ்ரீமதி திடீரென விடுதியின் 2-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் ஸ்ரீமதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் மாணவியின் பெற்றோர் தன்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் கூறி உடலை வாங்க மறுத்து பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது.
அதில் மாணவியின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாகவும், மாணவி உயிரிழப்பதற்கும் முன்பாகவே உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் காரணமாக மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டு பள்ளியை சூறையாடினார். இந்த கலவரத்தை தடுக்க வந்த டிஐஜி, 2 எஸ்பிக்கள் உள்ளிட்ட 67 காவலர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதன் காரணமாக வன்முறையில் ஈடுபட்ட 300 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், பள்ளியின் முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, கணித ஆசிரியர் கிருத்திகா, வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தற்போது மாணவியின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்துவிட்டு கள்ளக்குறிச்சிக்கு கிளம்பி சென்றுள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவி மரணத்தை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனவும், சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் தனியார் பள்ளி மாணவர்களை அருகில் உள்ள அரசு பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், மாணவர்களின் தற்கொலையை குறைப்பதற்கு கவுன்சிலிங் கொடுக்கப்படும் எனவும், மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு மாணவிக்கு நீதி வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.