Categories
மாநில செய்திகள்

மாணவியின் மரணத்தில் வெடித்த வன்முறை…. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா….? அதிரடி கேள்விகளை எழுப்பிய நீதிபதி…!!!

மாணவி உயிரிழந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி விடுதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டு பள்ளியை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வன்முறையின் காரணமாக அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, மாணவியின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவியின் தந்தை ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளின் மரணம் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு தொடர்பான வழக்கு இன்று காலை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி வழக்கு தொடர்ந்து விட்டு போராட்டத்தில் ஈடுபட்டது எதற்காக? போராட்டம் நடத்துவதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தார்? நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? மரணத்திற்கு என்ன காரணம்? என கேள்வி எழுப்பினார். இதற்கு மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாணவியின் தந்தை கடந்த 14-ஆம் தேதி தான் வெளிநாட்டிலிருந்து வந்தார், வன்முறைக்கும் மாணவியின் பெற்றோருக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என கூறினார். அப்போது பேசிய நீதிபதி வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு சிறப்பு படை அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், 4500 மாணவர்களின் டிசியை எரிப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தார் எனவும் கேட்டார்.

அதன் பிறகு மாணவியின் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறை திடீரென ஏற்பட்டது கிடையாது, ஏற்கனவே திட்டமிட்டப்பட்டு நடைபெற்றுள்ளது. காவல்துறையும், உளவுத்துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பினார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தகுதி இல்லாத நபர்கள் என கூறி, மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்றார். இதற்கு நீதிபதி தகுதி இல்லாத மருத்துவர் என்று எப்படி கூறலாம். நீங்கள் என்ன நிபுணரா? என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு காவல்துறை தரப்பில் அமைதியான போராட்டம் திடீரென வன்முறையாக மாறியது என்றும், தற்போது நடந்த வன்முறை பற்றி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினர்.

இதற்கு நீதிபதி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து, வீடியோ பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு பிரேத பரிசோதனை செய்யும் போது மனுதாரர் தன்னுடைய வக்கீலுடன் உடன் இருக்க வேண்டும். இயற்கைக்கு முரணான மரணங்கள் குறித்து சிபிசிஐடி விசாரிக்கும். மாணவியின் இறுதிச்சடங்கு அமைதியான முறையில் நடக்க வேண்டும். சமூக வலைதளங்களில் தேவையில்லாத கருத்துக்களை பதிவு செய்ய கூடாது. மாணவியின் மரணம் குறித்து முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மாணவியின் தந்தை தன்னுடைய மகளின் மர்ம மரணம் குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், என்னுடைய மகளின் உடலை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

அதற்கு நீதிபதி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று கூறினால், வன்முறையால் ஏற்பட்ட மொத்த இழப்பீட்டிற்கும் தாங்கள்தான் ஒட்டுமொத்த பொறுப்பு என்று ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதோடு மனுதாரர் தேவையில்லாமல் எந்தவித பேட்டியும் கொடுக்கக் கூடாது எனவும் கூறினார். மேலும் மாணவி உடலை மறு பரிசேதனை செய்வதற்காக தடவியல் துறை ஓய்வு பெற்ற மருத்துவர் சாந்தகுமாரி, சேலம் அரசு மருத்துவமனை டாக்டர் கோகுலநாதன், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர் ஜீலியான ஜெயந்தி, விழுப்புரம் அரசு மருத்துவமனை டாக்டர் கீதாஞ்சலி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |