பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணாத்தில் கதீஜா மஹ்மூத் என்ற இளம்பெண் இறுதி ஆண்டு பல் மருத்துவம் பயின்று வருகிறார். இந்த நிலையில் அம்மாணவியை கடத்தல், சித்திரவதை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்ததாக 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கதீஜா மஹ்மூத்தின் 2 சகோதரர்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால் பாதிக்கப்பட்ட அப்பெண் தனது வயதான தாயுடன் பைசலாபாத்தில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவளது வகுப்புத்தோழியான அன்னாவின் தந்தை ஷேக் டேனிஷ் என்பவர் கதீஜாவை மிகவும் விரும்புவதாக கூறி திருமணத்திற்கு வற்புறுத்தியுள்ளார். அதற்கு கதீஜாவும், அவரது குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்தனர். “ஷேக் டேனிஷ் என் அப்பாவின் வயதுடையவர் ஆவார்.
இதை நான் அன்னாவிடம் கூறியபோது அவள் என் மீது கோபமடைந்தாள்” என கதீஜா கூறினார். இதையடுத்து ஷேக் டேனிஷ் தன் ஆட்களுடன் கதீஜாவை கடத்திச் சென்று திருமணம் செய்ய மறுத்ததற்காக அவரை சித்திரவதை செய்துள்ளார். தன் வீட்டின் அறைக்கு அழைத்துச்சென்று அங்கு கதீஜாவை பாலியல் ரீதியாக அவமானப்படுத்தி அச்செயலை பதிவுசெய்துள்ளார். இச்சம்பவத்தின் வீடியோக்கள் வைரலாக பரவியதை அடுத்து, சந்தேக நபர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்களை விசாரிக்க சிறப்புக் குழுவை பஞ்சாப் காவல்துறையினர் அமைதிதுள்ளனர். தற்போது 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் டேனிஷ் மற்றும் அவரது மகள் உட்பட 7 சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மீதம் உள்ள சந்தேக நபர்களை கைது செய்வதற்கான சோதனைகள் நடந்து வருகிறது. அவர்களில் ஷேக் டேனிஷ் ஒரு தொழில் அதிபர் எனவும் அரசியல் கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் டுவிட்டரில் “ஜஸ்டிஸ்பார்கதிஜா” கடந்த 2 நாட்களாக பாகிஸ்தானில் டிரெண்டாக இருந்தது. இந்த வீடியோவை பார்த்து மக்கள் குற்றவாளிகள் மீது கடும் ஆத்திரத்தில் இருந்தனர். சென்ற வியாழக்கிழமை அன்று ஷேக் டேனிஷை அவரது கூட்டாளிகளுடன் பைசலாபாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது பாகிஸ்தான் வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் மாணவியை சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி தாக்கிய நபரை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கினர். இருப்பினும் காவல்துறையினர் டேனிஷை மீட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.